ரூ. 1 லட்சம் கோடி வசூல் வந்தால் பெட்ரோல் ஜிஎஸ்டியின் கீழ் வரும் : சுஷீல் மோடி
டில்லி
ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டினால் பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் வரும் என ஜிஎஸ்டி யின் தலைவர் சுஷீல் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில துணை முதல்வர் சுஷீல் மோடி ஜிஎஸ்டியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். அத்துடன் பீகார் மாநில நிதித்துறை அமைச்சர் பொறுப்பையும் சுஷீல் மோடி கவனித்து வருகிறார். நேற்றுடன் ஜிஎஸ்டி இந்தியாவில் அமுலாக்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இதை ஒட்டி அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது சுஷீல் மோடி, “கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. தற்போது பல பொருட்களுக்கான ஜி எஸ் டி குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜிஎஸ்டி அமுலாக்கத்தினால் விலை உயரும் என பலரும் தெரிவித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் குறைந்துள்ளன.
அனைத்து மக்களும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டினால் அதன் பிறகு பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது.
அதே நேரத்தில் ஜி எஸ் டி யின் கீழ் கொண்டு வந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய மிகவும் குறைந்த வாய்ப்பே உள்ளது. ஏனெனில் மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் அதிக பட்சமான 28% வரி விதிப்பையே இப் பொருட்களுக்கு அளிக்க விரும்புகிறது. ஒரு சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 28%க்கும் அதிகமான ஜிஎஸ்டி யை விதிக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார்.