சென்னை:

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிடில் சினிமாவை விட்டு விலகுவேன் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ சினிமா சூதாட்டம் போன்றது அல்ல. சினிமா என்பது கலை. ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது என்பது சரியானது கிடையாது. புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி திரைப்பட தயாரிப்புக்கு 28% விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்’’ என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது கட்டுப்படியாகது. இந்தி மொழி திரைப்படங்களின் சந்தை வேறு. பிராந்திய மொழி படங்களின் சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28% வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்க முடியும்.

திரை துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும். 28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை. இந்தி திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்’’ என்று கமல் திட்டவட்டமாக தெரிவித்தார்.