கோவை:

நான் நினைத்திருந்தால் முதல்வராகி இருப்பேன் என்று சூலூர் தொகுதியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய டிடிவி தினகரன் கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைவர்கள், அமமுக தலைவர், கமல்ஹாசன் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அந்த தொகுதிகளில் முகாமிட்டு வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சூலூர் தொகுதியில் போட்டியிடு அ.ம‌.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் பேசினார். அப்பபோது, ச‌சிகலா, தனது சகோதரனாக நினைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார் என்று புலம்பியவர், அவர் சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டார், நான் நினைத்திருந்தால் அப்போதே முதல்வராகி இருப்பேன், என்னால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியும் என்று கூறினார்.

ஆனால், தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலோடு எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும், அவரின் ராஜதந்திரமும்  முடியப்போகிறது என்று கூறினார்.

டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் விடுத்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அமமுக கூட்டங்களில் பேசி வரும் தினகரன் நான் நினைத்தால் முதல்வராக இருப்பேன் என்று புலம்பி வருவது, அவரின் அதிகார போதையை வெளிக்காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக அரசின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் நிலையில் இருப்பதால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. எடப்பாடி ஆட்சியை கலைக்கும் எண்ணத்தில் அதிமுக எம்எல்ஏக்களை  விலைக்கு வாங்க அமமுக ரகசிய  குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.

அதே வேளையில் மற்றொரு புறம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கும் நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவுடன் எடப்பாடி ஆட்சியை கவிழ்த்து விட்டு அரியணை ஏற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் அமையப்போகும் ஆட்சியை தொடர்ந்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தொடர்பாக உறுதியான நிகழ்வுகள் அரங்கேறும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.