நான் 3வது கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு சாம்பலாகி விடுவார்: சந்திரசேகரராவ் ஆவேச பேச்சு

ஐதராபாத்:

தெலுங்கானாவில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க எண்ணி, மாநில அமைச்சரவையை ராஜினாமா செய்ய வைத்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை சந்திரசேகரராவ் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகிறது. அதேவேளையில் கூட்டணி பேச்சுகளும் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார் சந்திரசேகர ராவ். அதேவேளையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா மாநிலத்தில் காலூன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தனது கட்சியினரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்க முடுக்கி விட்டுள்ளார்.  இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே பயங்கர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தெலங்கானா மாநிலம், கட்வல் நகரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது,

சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறியவர்,  அவருக்கு என்னைப்பற்றி முழுமையாக தெரியாது. இதே நிலை நீடித்தால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும்,  நான் சிவபெருமான் மாதிரி 3-வது கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு எரிந்து சாம்பலாகி விடுவார். அவரது தலைவிதி அத்தோடு முடிந்து விடும். தெலுங்கானா மக்களை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று சந்திரபாபு நாயுடு நினைக்கிறார். நீங்கள் பணம் கொடுத்து பாருங்கள். உங்களை மக்கள் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு தூக்கி வீசி விடுவார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் காலடியில்தான் சந்திரபாபு நாயுடு இருந்தார். இப்போது வெட்கம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் போய் கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும்.

இவ்வாறு சந்திரசேகரராவ் ஆவேசமாக பேசினார்