’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி..

மே.வங்க மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தனர்.

இந்த நாளை, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 21 ஆம் தேதி தியாகிகள் தினமாக திரினாமூல் காங்கிரஸ் கட்சி அனுசரிக்கிறது.

வழக்கமாகக் கொல்கத்தாவில் தியாகிகள் தினத்தையொட்டி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திரினாமூல் காங்கிரஸ் தலைவரும், மே.வங்க முதல்-அமைச்சருமான மம்தா பானர்ஜி உரை நிகழ்த்துவார்.

இந்த ஆண்டு கொரோனா பரவல்  காரணமாக  வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரை நிகழ்த்திய மம்தா,’ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசுகளைப் பணம் பலம், அதிகார பலம் மூலம் பா.ஜ.க.அரசு கவிழ்த்து வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

‘’அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் திரினாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்’’ என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி’’ நாங்கள் வென்றால் ஆயுள் முழுக்க இலவச ரேஷன் வழங்கப்படும்.’’ என்று உறுதி அளித்தார்.

‘’ஓட்டுகளை வாங்குவதற்கு நோட்டுகளை அள்ளி வீசும் பா.ஜ.க.வுக்கு, மே.வங்க மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’’ என்று மம்தா எச்சரித்தார்.

-பா.பாரதி.