நாடு திரும்பினால் அடித்து கொன்று விடுவார்கள்….மெகுல் சோக்சி

மும்பை:

நாடு திரும்பினால் என்னை அடித்து கொலை செய்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று மெகுல்சோக்சி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி, இவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கைது வாரன்ட்டை ரத்து செய்யக் கோரி மெகுல் சோக்சி சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘‘ டிவி சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியை பார்த்தேன். அந்த விவாதத்தில் தொலைபேசி மூலம் பேசிய நேயர்கள் 2 பேர் சோக்சி போன்றவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

நிகழ்ச்சியை நடத்தியவரும் அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களும் நேயர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் சிரித்தனர். இதன் மூலம் நேயர்களின் பேச்சை அவர்கள் ஆமோதித்துள்ளனர். டிவி விவாதம் குறித்த சிடியையும் இணைத்துள்ளேன். தற்போதைய சூழலில் நான் நாடு திரும்பினால் அடித்து கொல்லப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே கைது வாரன்ட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.