லக்னோ: பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா  குறித்து பேசினால் தேசதுரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று, அதே கட்சியைச் சேர்ந்த   எம் எல் ஏவின் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. உ.பி.யிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.  உயிரிழந்த வர்களின் உட்ல்கள் கங்கை நதியில் தூக்கி வீசப்பட்டு வருகிறது. இதனால், கங்கை நதி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. இது மட்டுமின்றி இறந்தவர்களின் உடல்கள் நதியில் மிதந்து அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கி வருகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் செயலற்ற தன்மையால் அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மருத்துவமனைகளில் இடவசதி இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை தொடங்கி பல்வேறு மருத்துவ உள்கட்டமைப்பு குறைபாடுகளால் உயிரிழப்பும் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. அரசுக்கு எதிராகவோ, குற்றம் சுமத்தியோ யாரும் கருத்து தெரிவித்தால் அவர்கள் மிரட்டப்படுவதாகவும், தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யோகி அரசின் நடவடிக்கைக்கு பாஜக எம்எல்ஏக்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், யோகி அரசு மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ அதிருப்தி தெரிவித்துள்ளார்.  மாநிலத்தில் நிகழும் கொரோனா அவலம் குறித்து பேசினால் தேசதுரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

உ.பி. மாநிலம்  சீதாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ராகேஷ் ரத்தோர், இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  மாநிலத்தில் நிகழும் கொரோனா அவலங்கள் குறித்து பேச முடியாத நிலை தங்களுக்கு உள்ளது.  ‘எந்த எம்எல்ஏவாவது தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என்று எதிர்கேள்வி எழுப்பிவயவர், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் நான் கூற முடியும். அரசு கூறுவதைத்தான் நானும் கூற வேண்டும். நான் அதிகம் பேசினால் என் மீது துரோகி என்று முத்திரை குத்தப்படும்; தேச துரோக செயல்கள் தடுப்புச் சட்டம் பாயும்’ என்றார். எம்எல்ஏக்களான எங்களுக்கே மதிப்பு இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இவர் பேசும்  வீடியோ சமுகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யோகி அரசுக்கு எதிராக ஏற்கனவே பாஜக எம்எல்ஏ ராம்கோபால் லோதி கருத்து தெரிவித்திருந்தார். அப்போது,  ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது மனைவிக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் தரையில் படுக்க வைத்திருந்தேன். எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியவில்லை’ என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு  கூறியிருந்தார்.

அதுபோல, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ‘எனது பரேலி மக்களவைத் தொகுதியில் கொரோனாவை கையாள போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லை. மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.