ஜெயலலிதா இருந்திருந்தால்……..    -ஜீவசகாப்தன்

 நீட் தேர்விற்கு ஒத்துழைப்பு ,நீட் தேர்வு குறித்து தெளிவுபடுத்தாமை போன்ற அரசின் செயல்பாடு களின்  விளைவாக அனிதாவை பறிகொடுத்துவிட்டோம் என்று தமிழ்நாடு கொதிநிலைக்குச் சென்றிருக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த அளவிற்கு மோசமான விளைவுகள் வந்திருக்காது என்கிற வாசகம் அனைவராலும் பேசப்படுகிறது. இந்த வாதத்தை ஜெயலலிதா இருக்கும்பொழுது அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மனதில் அசை போட்டு திறனாய்வு  செய்யவேண்டும்.

சமூக நீதி மீட்ட ஜெயலலிதா

ஜெயலலிதா வெற்றிப் பெற்ற 91,2001,2011 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றார். அந்த காலகட்டங்களில் எதிர்க்கட்சி வலிமையான எண்ணிக்கையில் இல்லை. 91 ல் முதன் முறையாக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். கூட்டணி கட்சியாக இருந்தபொழுதும், காங்கிரசுடன் உடன்பட்ட போக்கை அவர் கடைபிடிக்கவில்லை. ஆளுநர் நியமனம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் நடுவண் அரசுடன் ஜெயலலிதாவிற்கு பிரச்சனை தொடர்ந்து கொண்டேயிருந்தது. அந்த ஆட்சிக் காலத்தில்தான் நடுவண் அரசிற்கு உடன்பாடில்லாத போதும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை  போராடி பெற்றுத் தந்தார்.

கட்டுரையாளர்

அதிகார வர்க்க பிரதிநிதியாக ஜெயலலிதா

2001 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது,நடுவண் அரசு மக்கள் விரோத சட்டங்களை புகுத்தியது என்று சொல்லுவதைவிட,தமிழக அரசே  ஒடுக்கும் சட்டங்களை மக்கள் மீது ஏவியது. அரசு ஊழியர்க ளுக்கு எதிராக டெஸ்மா சட்டம் பாய்ந்தது. நள்ளிரவில் அரசு ஊழியர்கள் ஆண் பெண் என்கிற பேதமில்லாமல்,கைது செய்யப்பட்டக் காட்சிகள் ஜனநாயகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து,ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டம், கோவிலில் கோழி,ஆடு, பலியிடக்கூடாது போன்றசட்டங்கள் வெகு மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

.. அதன் பிறகு சங்கராச்சாரியர் கைது சம்பவம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வு. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம் என்று கூட சொல்லலாம். அப்போது கூட்டணி கட்சியாக இருந்த பாஜக அழுத்தம் கொடுத்தும் ஜெயலலிதா அசைந்து கொடுக்க வில்லை. சங்கராச்சாரியர் கைது என்கிற ஒற்றைச் சம்பவத்தை வைத்து மட்டும் ஜெயலலிதாவை மதிப்பிட முடியாது.

முதன் முறையாக அவர் ஆட்சிக்கு வந்தபோது,” ராமருக்கு இங்கு கோவில் கட்டமுடியாவிட்டால், வேறு எங்கு கட்டமுடியும் ” என்று கேட்டவர்தான் ஜெயலலிதா. 2002 ம் ஆண்டு குசராத் கலவரத் திற்கு காரணமான சபர்மதி இரயில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தபோது, “பெரும்பான்மை சமூகத்தவர் தாக்கப்படும்பொழுது அனைவரும் மவுனம் காக்கிறார்கள். இது போன்ற சம்பவம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெற்றால் காட்டுமிராண்டி சம்பவம் என்று போட்டி போட்டுக்கொண்டு விமர்சனம் செய்வார்கள்” என்று அறிக்கை வெளியிட்டார்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இடது ,வலது ,திராவிடம் ஆரியம் என எந்த சித்தாந்த தாக்கமும் இல்லாதவர். தான் ஆளும் மாநில உரிமையை, மத்திய அரசு ஒடுக்க நினைத்தால் போர்க்குணம் கொண்டு எழுவார்.அதே சமயம் அதிகாரம் தன் வசம் இருக்கும்பொழுது,அரசிற்கு எதிரான விமர்சனங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார்.

மாநில உரிமை மீட்பு போராளி

91 லிருந்து 2004 வரை ஜெயலலிதாவின் அறிக்கைகள்,விமர்சனங்கள் போன்றவற்றை கவனித்தால், அவருடைய கடைசி கால அரசியல் செயல்பாடுகளிலிருந்து பெரிதும் வேறுபடும்.. 2004 தேர்தல் தோல்விக்குப் பிறகு, அவரது அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மக்கள் செல்வாக்கும் அவருக்குப் பெருகியது என்பது உண்மை. 2009 ம் ஆண்டு ஈழப்போருக்குப் பிறகு, திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈழஆதரவாளர்க ளின் ஆதரவு குறைந்தது. ஈழ ஆதரவா ளர்கள், தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் திமுகவிற்கு செல்வாக்கு குறைந்தது. திமுகவிற்கு ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை ஜெயலலிதா கைப்பற்ற ஆயத்தமானார். ஈழம் மற்றும் போராளிக்க குழுக்கள் மீது  கடந்த காலங்களில், தான் வெளியிட்ட எதிர்மறை விமர்சனங்கள் மறந்து போகுமளவிற்கு ஈழ ஆதரவு செயல்பாடுகளில் இறங்கினார். காங்கிரசு எதிர்ப்பையும் தமிழின உணர்வையும் ஒரு சேர சந்தைப்படுத்தினார்.

அப்போதைய காங்கிரசு அரசின் இலங்கை ஆதரவு போக்கும்,ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் ஆதரவு போக்கும் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. காவிரிப் பிரச்சனையில் அரசிதழில் வெளியிட வலியுறுத்தியதில் தொடங்கி, நீதிமன்றங்களின் மூலமாக நடுவண் அரசிடம் சமர் புரிந்து கொண்டே இருந்த ஜெயலலிதாவின் போர்க்குணம் அவரை மாநில நலன் போராளி யாக உயர்த்தியது. மீனவர் பிரச்சனையைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் கடிதம் எழுதினார்கள் என்கிற பொதுவான விமர்சனம் இருக்கிறது. இருப்பினும்,ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 க்குப் பிறகு,மீனவர்கள் யாரும் சுட்டுக்கொல்லப்படவில்லை என்பது அதிமுக நண்பர்கள் விவாதங்களில் ஆதாரத்துடன் பதிவு செய்தனர்.

மோடி அரசும் ஜெயலலிதாவின் மென்மையான போக்கும்

2014 வரை மாநில உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, காங்கிரசு எதிர்ப்பில் வீரியமாக இருந்தார். அந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டாலும், இறுதிகட்ட தேர்தல் பரப்புரை வரை பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியை விமர்சிக்கவில்லை. கடைசி கட்டப் பரப்புரையில்தான் மோடியா? லேடியா? என்று பேசினார். அதற்குப் பிறகுதான் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் ஆதரவு தந்தன.

2014 தேர்தல் முடிவுகள் எப்படியும் தொங்கு பாராளுமன்றமாக அமையும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர். அப்படி அமையும்பட்சத்தில்,தேர்தலுக்குப் பிறகு மோடியுடன் கூட்டணி அமைத்து நடுவண் அரசின் ஆட்சியில் பங்கு பெறலாம் என்பது அதிமுகவின் திட்டமாக இருந்தது. அதனால்தான் மோடியை அவர் விமர்சிக்கவில்லை. ஆனால், பாஜகவோ மாபெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமலேயே, பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. இதனால் ஜெயலலிதா 37 இடIங்களை வென்று, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை பெற்றாலும், ஆட்சியில் பங்கேற்க முடியவில்லை.

மோடி பிரதமரான பிறகும் மீனவர் பிரச்சனை,காவிரி பிரச்சனை தொடர்ந்தது. இருப்பினும் ஜெயலலிதா காங்கிரசிடம் காட்டிய ஆவேசத்தை காட்டவில்லை. தனது அழுத்தத்தை மட்டும் பதிவு செய்துக் கொண்டயிருந்தார். பாஜக ஆட்சியில்,ஜெயலலிதா விடாப்பிடியாக நின்று சாதித்த விசயங்கள் நீட் மற்றும் ஜிஎஸ்டி..

மாநில அரசின் ஒப்புதல் பெற்றே ஆளுநரை நியமிக்கவேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால்,பொறுப்பு ஆளுநராக வித்யாசகர் ராவை நியமிக்கும்பொழுது,ஜெயலலிதா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மத்தியில் மோடி அரசு வலிமையாக இருந்ததும்,மாநிலத்தில் எதிர்க்கட்சி வலிமையாக இருப்பதும் ஜெயலலிதாவின் நடுவண் அரசு எதிர்ப்பை மென்மைப்படுத்தின என்று சொல்லலாம்.

பன்னீர் செல்வம் ஆட்சி

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ஓ.பன்னீர் செல்வம் அரசு வர்தா புயல் நடவடிக்கைகளின் மூலமாக மக்களுக்கான அரசு என்பதை காட்டியது. வர்தா புயலின் போது, முதலமைச்சரே முகாம்களுக்குச் சென்று உணவை பரிசோதித்தார். மக்களை சந்தித்தார்.மக்களிடம் பேசினார்.

ஆர்.பி.உதயக்குமார்,விஜயபாஸ்கர் போன்ற அமைச்சர்களெல்லாம் வாய் திறந்து பேசுவார்கள் என்கிற உண்மை அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால்,வர்தா புயல் நிவாரணப் பணிகள் இவ்வளவு விரைவாக நடந்திருக்குமா? என்பது அய்யத்திற்குரிய ஒன்றே. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது,2015 ம் ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட அந்த புயலை எவ்வாறு எதிர்கொண்டார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அந்த புயலில் பலரது உடைமைகள் மட்டுமல்ல மேயராக இருந்த சைதை துரைசாமி உட்பட பலரும் காணமால் போயினர். மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை என்பதை மறக்கமுடியாது.

தன்னை யாரும் எளிதில் சந்திக்க முடியாது என்பதையே தனக்கான மிகப்பெரிய தகுதியாக வகுத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவரின் தடாலடி நடவடிக்கைகளை நிர்வாகத்திறமை என்று அவரது தொண்டர்கள் புகழ்ந்தனர். அரசனின் சர்வாதிகாரத்தை ஆளுமைத் திறன் என்று நினைத்து பாராட்டியதன் விளைவு சென்னைப் புயல் நிவாரணப் பணிகள் நடைபெறாமலே இருந்தது.

.அம்மாவின் ஆணையில்லாமல் எந்த நிர்வாகியும் மக்கள் பணி செய்ய தயாராக இல்லை. அம்மாவிடம் சென்று பேசவும் யாருக்கும் துணிச்சலும் இல்லை. அதிமுகவிடம் நிலவிய அம்மா பக்தர் என்கிற உறவு முறையின் தண்டனையை சென்னை அனுபவித்ததது. பன்னீர் செல்வம் முதலமைச்சரானபோது அணுககூடிய தலைமையாக இருந்ததால்,வர்தா புயல் நிவாரணபணிகள் முடுக்கிவிடப்பட்டன.

ஜெயலலிதா என்கிற தலைமையிலிருந்து தப்பிய பன்னீர் செல்வம்,மோடி என்கிற எஜமானருக்கு விசுவாசியாக மாறியதன் விளைவை நாம் பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி

அம்மாவிற்குப் பிறகு,சின்னம்மா தலைமையை ஏற்று செயல்பட்ட எடப்பாடி தனது எஜமானரை உடனடியாக மாற்றிக் கொண்டார்.ஆம்,அவரும் மோடியை தனது எஜமானராக ஏற்றுக் கொண்டார்.ஜெயலலிதா சொல்வதைத் தவிர வேறு எதுவும் செய்யத்தெரியாத, செய்யக்கூடாது என்று பழக்கப்பட்ட விசுவாசிகள் தற்போது,வேறு எஜமானருக்கு தங்களது விசுவாசத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.அதனுடைய விளைவு மாநில உரிமையை முழுமையாக இழந்து நிற்கிறோம்.

ஜெயலலிதா இருந்திருந்தால்,மாநில நலன் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்கிற வாதம் முன்வைக் கப்படுகிறது. சல்லிக்கட்டுக்கிற்கு ஆதரவாக ஜெயலலிதா குரல் கொடுத்தார். ஆனால் அவர் இருந்திருந்தால், மெரீனாவில் நடைபெற்ற தைப்புரட்சி சாத்தியமாகியிருக்காது. மத்திய அரசிற்கு எதிராக அவர் குரல் கொடுப்பார்.ஆனால் மக்கள் போராட்டத்தை ஆதரித்திருக்க மாட்டார்.அதே போல் கல்லூரி மாணவர்கள்,பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுவதை யும் அவர் கட்டுப்படுத்துவார். ஜெயலலிதா மத்திய அரசு மாநில அரசின் மீது திணித்த திட்டங்களை வலிமையாக எதிர்த்தார் என்பதே வரலாறு. ஆனால்,மக்கள் போராட்டங்களை ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்.

பன்னீர் செல்வம் எடப்பாடி போன்றோர்கள் முதலமைச்சரானதால் நாட்டில் ஒரு நல்ல விசயம் அரங்கேறியிருக்கிறது. ஆம்.மக்கள்  மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் அரசியல்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தெருவில் இறங்கி போராடும் உந்துதலை பெற்றிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மாநில உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும் அல்லது காப்பாற்றப்படாமல் கூட போயிருக்கும். ஆனால் மக்கள் எழுச்சி  சாத்தியப்பட்டிருக்காது என்பதே எனது கணிப்பு.

Leave a Reply

Your email address will not be published.