சாத்தூர்:

ஜெயலலிதாவுக்கு  அமெரிக்காவில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  இன்று விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கலின்போது கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கமலின் பலம் அவருக்குத் தெரிந்துவிட்டதால்தான் தூண்டிலில் புழுவைப் போல் முன்னெச்சரிக்கையாக வேட்பாளர்களைக் களமிறக்கியிருப்பதாக விமர்சனம் செய்தார்.

கோடநாடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழைக் குலையைக் கூட வெட்ட மாட்டார் என்றும், அவரை நான்கைந்து கொலைகள் செய்துவிட்டதாக பொய் கூறியது வீடியோ மூலம் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.

தொடர்ந்து பேசியவர், அம்மா அப்போலோவில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தார் என்றவர்,  ஒரு வேளை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்ற உள்ளுணர்வு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அனைவருக்கும் இருந்ததாகவும் கூறினார்.

இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவைப் போல் ஒரு கோடி சாலைப் பணியாளர்களுக்கு வேலை என பொய் சொன்னால்தான் தேர்தல் விதி மீறல், உண்மையைச் சொன்னால் அது தேர்தல் விதி மீறல் அல்ல என்றவர்,  விருதுநகரில் கொட்டும் முரசு தான் ஜெயிக்கும் என்றும் கூறினார்.

ஏற்கனவே துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தல்  உயிர் பிழைத்திருப்பார் என  கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.