டில்லி

டில்லி உயரநீதிமன்றம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ரூ.18000 கோடி பிணை அளித்தால் வெளிநாடு செல்லலாம் என உத்தரவிட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கி உள்ளது.  கடன் கொடுத்தோர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையில் கூடி இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்று பணத்தை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஸ்டேட் வங்கியின் உத்தரவுக்கு இணங்க நிறுவன தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவர் குடும்பத்தினர் பதவி விலகினர்

வங்கியில் இருந்து கடனாக பெறப்பட்ட பணத்தை நரேஷ் கோயல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி உள்ளதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இதனால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிகப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அவர் தனது மனைவியுடன் துபாய் வழியாக லண்டன் செல்ல முயன்றார்.

அவர் அதற்காக துபாய் செல்லும் விமானத்தில் ஏறி விமானம் கிளம்பிய நிலையில் விமானம் திரும்ப அழைக்கபட்டது. நரேஷ் கோயல் மற்றும் அவர் மனைவி தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நரேஷ் கோயல் தம் மீது விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டிசை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தம்மை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார்.

டில்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டிஸை திரும்ப பெற முடியாது எனவும் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்க முடியாது எனவும் தீர்ப்பு அளித்தது. ஆயினும் தம்மை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என நரேஷ் கோயல் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சுரேஷ் கைத் தற்போதைய நிலையில் அவர் வெளிநாடு செல்ல தீர்ப்பில் எவ்வித இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது எனவும் அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் ரூ.18000 கோடியை பிணையாக முதலீடு செய்தால் இது குறித்து பரிசீலிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.