நீதித்துறை சுதந்திரமாக இல்லை எனில் பாதுகாப்பு இருக்காது : உச்சநீதிமன்ற நீதிபதி

நாக்பூர்

ச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் நீதித்துறை சுதந்திரமாகவும் வலுவாகவும் இல்லை எனில் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது என கூறி உள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதிகளில் ஒருவர் செல்லமேஸ்வர்.   சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை குறித்து விமர்சித்து இவர் தலைமையில் முதன் முதலாக நீதிபதிகள் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நிகழ்த்தினர்.   அந்த கூட்டத்தில் நீதித்துறையில் அரசியல் குறித்து பல கருத்துக்களை செல்லமேஸ்வர் கூறி இருந்தார்.    மேலும் வழக்குகள் ஒதுக்குவது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான அதிருப்தியையும் அப்போது இவர் தெரிவித்திருந்தார்.

நாக்பூரில் கடந்த சனிக்கிழமை அன்று சட்டத்தின் பங்கும் வழக்கறிஞர்களின் கடமையும்  என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.  அதில் செல்லமேஸ்வர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர், “நமது வருங்கால சந்ததிகள் மதிப்புடனும் பாதுகாப்புடனும் இந்த நாட்டில் வாழ வேண்டும் எனில் நீதி அமைப்பு காக்கப் பட வேண்டும்.   அதை பலப்படுத்த வேண்டும்.

நீதித்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.   நீதித் துறை சுதந்திரமாகவும் வலுவாகவும் இல்லை எனில் நாட்டில் யாரும் பாதுகாப்புடன் வாழ முடியாது.    நீதித்துறைக்கு தற்போது மிகவும் மிரட்டல்களும் அபாயங்களும் உள்ளன.   அதை வழக்கறிஞர்கள் தான் களைந்து உதவ வேண்டும்,   அரசோ அரசியல் கட்சிகளோ தங்கள் பலத்தை நீதித்துறையின் மீது காட்டக் கூடாது.   அப்படி செய்தால் அது ஊழலுக்கு வழி வகுக்கும்”  என கூறி உள்ளார்.