ஆர்.கே.நகர் தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால்…… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக  தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் அள்ளி வீசப்பட்டது நிரூபணமானதால் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பின்னர், ஐகோர்ட்டின் உத்தரவின்படி மீண்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம். அதன்படி தற்போது வரும் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு மீண்டும் பணம் கொடுப்பதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பணப்பட்டுவாடாவை தடுக்கவும், பரிசுவங்கள் வழங்கப்படுவதை தடுக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை  தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும், தேர்தல் பார்வையாளர்களின் கழுகு பார்வையை மீறியும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை ஆதாரப்பூர்வமாக நாங்கள் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா செய்பவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.