7 பேரையும் விடுவித்தால் சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும்: நளினி விடுதலை வழக்கில் ஹைகோர்ட்டில் மத்திய அரசு வாதம்

--

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறி இருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை  விடுவிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், நளினி சார்பில் புதிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தன்னை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு 2018 டிசம்பரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டது, ஆனால், ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக மனுவில் நளினி கூறி இருந்தார்.

எனவே தான் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஆகவே, தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அதன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2016ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதி அனுமதி கேட்டது. அதற்கு பதிலளித்து 2018 ஏப்ரல் 18ம் தேதி மத்திய அரசு அனுப்பிய பதிலில், அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்தது என்றார்.

இந்த வழக்கில் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் கூறினார். அதனை நளினி தரப்பு வழக்கறிஞர் எதிர்த்தார்.

வழக்கில் மத்திய அரசு மனுதாரராக இல்லை. பின்னர் தாமாக முன்வந்து மனு தாக்கல் செய்திருப்பது ஏன் என்றும்  கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மத்திய அரசை மனுதாரராக இணைத்த நீதிமன்றம், ஜனவரி 28ம் தேதிக்குள் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக கருத்தைத் தெரிவிக்கும்படி ஆணையிட்டுள்ளது.