வன்முறையைத் தவிர்க்க டெல்லி எல்லைகளை மூட வேண்டும்: கெஜ்ரிவால் ஆலோசனை

புதுடெல்லி: அனைவரும் வன்முறையைத் தவிர்க்க வேண்டுமென்றும், வன்முறையை தடுக்க தேவையானால் டெல்லியின் எல்லைகளை மூட வேண்டுமென்றும் கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய சிஏஏ -வை எதிர்த்து டெல்லியில் பல நாட்களாக, பல்லாயிரம் பேர் ஷகீன்பாக் என்ற இடத்தில் விடாது போராடி வருகிறார்கள். இதனை ஒடுக்குவதற்கு மோடி அரசு பலவகைகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவா வெறியர்கள், இப்போராட்டத்தில் முடிந்தளவிற்கு வன்முறையைத் தூவி வருவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், டெல்லியில் சமீப நாட்களாக நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், “டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுக்க நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். வன்முறையைத் தவிர்க்குமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

டெல்லியின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், வன்முறையில் ஈடுபடும் நபர்கள், வெளியில் இருந்து வருவதாகக் கூறியுள்ளனர். எனவே, அவர்களைத் தடுக்க எல்லைகளை மூடி முத்திரையிட வேண்டும்.

மீறி நுழைய முயலும் போராட்டக்காரர்களை தடுக்கவும் கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்றுள்ளார்.