மும்பை

பிரதமர் வேட்பாளராக நிதி கட்கரி நிறுத்தப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அமைச்சரவையிலும் மத்திய பாஜக அமைச்சரவையிலும் சிவசேனா கட்சி இடம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாஜக அரசை கடுமையாக பல விவகாரங்களில் சிவசேனா விமர்சித்து வருகிறது.

ராமர் கோவில் கட்டப்படாததற்கு சிவசேனா தொடர்ந்து பாஜக அரசை குறை கூறி வருகிறது. அத்துடன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை சிவசேனா கோரி வருகிறது.

சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகாராஷ்டிராவில் தனித்து போட்டியிட தயாராக வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவித்தார். அதை ஒட்டி சிவசேனாவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக அறிவித்தது. ஆனால் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைக்க விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், “சிவசேனாவின் அகராதியில் கூட்டணி என்னும் வார்த்தை இன்னும் நீக்கப்படவிலை. கூட்டணி பற்றி பாஜக சிந்திக்கிறது. எங்கள் கட்சி எங்கள் நிலையைப் பற்றி யோசித்து வருகிறது.

பாஜக நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் நாங்கள் கூட்டணி வைப்போம்.    எங்களைப் பொறுத்த வரையில் நிதின் கட்கரி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் கூட்டணி அமைப்பதில் எவ்வித அச்சமும் கிடையாது.

பாஜக அரசுகு எதிராக அமைந்துள்ள மகா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும். அப்படி இல்லை எனில் வெற்றி கிடைக்காது” என கூறி உள்ளார்.