பாட்னா: கூட்டணியில் குறைந்த இடங்களை வென்றிருந்தாலும், பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாருக்கு பாரதீய ஜனதா வழிவிட்டால், அதற்காக, நிதிஷ்குமார் சிவசேன‍ைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமென்று, பாரதீய ஜனதாவை அட்டகாசமாக கலாய்த்துள்ளது சிவசேனா கட்சி.

“கொடுத்த வாக்கை கூட்டணிக் கட்சி காப்பாற்றவில்லை என்றால், என்ன நடக்கும்? என்பதை நாங்கள் மராட்டியத்தில் கற்றுக்கொடுத்துள்ளோம் பாரதீய ஜனதாவிற்கு” என்றுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம்.

மராட்டியத்தில், கடந்தாண்டு சட்டசபை தேர்தல் முடிந்தவுடன், குறைவான இடங்களைப் பெற்றிருந்த சிவசேனாவுடன், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டது பா.ஜ. இதனால், அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்து, தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதாவை அம்போவென நடுத்தெருவில் நிறுத்திவிட்டது சிவசேனா.

இந்நிலையில், பீகாரில் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பாரதீய ஜனதாவைவிட குறைவான இடங்களேப் பெற்றுள்ளதால், முதல்வர் பதவியை பா.ஜ. விட்டுத்தருமா? என்ற கேள்வி எழுந்தது. மேலும், மராட்டிய சம்பவம் பீகாரிலும் நிகழுமா? என்ற எண்ணமும் ஏற்பட்டது.

இந்நிலையில், கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்பட்சத்தில், இடங்கள் குறைவாக இருந்தாலும், நிதிஷ்குமாருக்கே முதல்வர் பதவியை விட்டுத் தருவது என்று பா.ஜ. முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்தே, இவ்வாறு பாரதீய ஜனதாவ‍ை கிண்டலடித்துள்ளார் சிவசேனாவின் சஞ்சய் நிருபம். அதேசமயம், மராட்டியத்தில் இந்த அதிரடி அரசியல் திருப்பத்தை முன்னெடுத்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.