வாக்களிக்காதவர்கள் வாங்கின காசை திருப்பி குடுங்க : புதிய மிரட்டல்

ஜாஜிரெட்டிகுடம், தெலுங்கானா.

வாக்களிப்பதாக கூறி பணம் வாங்கி விட்டு வாக்களிக்காதவர்கள் உடனடியாக பணத்தை திருப்பி தருமாறு ஒரு பெண் வேட்பாளரின் கணவர் மிரட்டி உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஜாஜிரெட்டிகுடம் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான உப்பு பிரபாகர். விவசாயியான இவர் மது விற்பனையையும் செய்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரபாகர் இவருடைய நடத்தை காரணமாக அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். வேறு கட்சியிலும் இவரை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இவர் தனது கிராம பஞ்சாயத்து தேர்தலில் இந்த மாதம்  தனது மனைவி ஹைமாவதி யை சுயேச்சை வேட்பாளராக நிற்க வைத்தார்.

இவருடைய வழக்கமான நடவடிக்கையைப் போல அவர் ஓட்டு சேகரிக்க ஒரு பிளாஸ்டிக் ஜக்கில் மதுவை ஊற்றி ஒவ்வொரு வீடாக அளித்து வந்தார். அத்துடன் வாக்களிக்க பணமும் அளித்தார். ஹைமாவதிக்கு பிளாஸ்டிக் ஜக் சின்னம் வழங்கப்பட்டிருந்தது. இவர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ.800 அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த கிராமத்தில் சகஜம் எனவும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவில் ஹைமாவதிக்கு மொத்தமுள்ள 269 வாக்குகளில் 24 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகர் வீடு வீடாக சென்று தாம் அளித்த பணத்தை திருப்பி தர வேண்டும் என சண்டை இட்டுள்ளார். அவர் தன்னுடன் அட்சதை என சொல்லப்படும் மஞ்சள் பொடி கலந்த அரிசியை எடுத்துச் சென்றுள்ளார்.

தனது மனைவிக்கு அவர்கள் வாக்களித்துள்ளதாக அட்சதை மீது ஆணையிட்டு சொல்லுமாறு மிரட்டி உள்ளார். தெலுங்கு மக்களைப் பொறுத்தவரை அட்சதை என்பது ஆண்டவனுக்கு ஒப்பானது என்பதால் அவர்கள் சத்தியம் செய்ய தயங்கி உள்ளனர். ஆகவே பிரபாகர் அவர்களிடம் உடனடியாக பணத்தை திருப்பி தர வேண்டும் என கலாட்டா செய்துள்ளார்.

இந்த நிகழ்வு யாராலோ விடியோ பதிவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதை அறிந்த பிரபாகர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.