மனதை உலுக்கும் அஞ்சலி பேனர்! !

--

மன்னார்குடி:

மன்னார்குடியில், மதுப்பழக்கம் காரணமாக, உயிரிழந்தவருக்கு அவரது பிள்ளைகள் ள் வைத்துள்ள உருக்கமான பேனர், படிப்போரை நெகிழவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்து உள்ள மேலநாகையைச் சேர்ந்தவர் சசி(எ)சாமிநாதன்(39). கார் ஓட்டுனரான இவர் அதீத மதுப் பழக்கம் காரணமாக கடந்த வருடம் மே  8-ம் தேதி மரணமடைந்தார்.  இவருக்கு தவமணி என்ற மனைவி, பாலகஸ்தூரி (10), பிரீத்தி (8) என்ற குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சாமிநாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அப்பகுதியில் நினைவஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்த பேனரில் ‘மது இல்லை என்றால் மன்னாதி மன்னன் எங்கள் தந்தை” என்று  சாமிநாதனின் குழந்தைகள் கூறுவது போல்  குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இந்த  வாசகங்களை படித்தவர்கள் நெகிழ்ந்தார்கள். .

இதுகுறித்து சாமிநாதனின் மனைவி தவமணி, “ எனது கணவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டிவந்தார். குடும்பத்துக்கு போதுமான வருமானம் வந்தது. ஆனால் அவர்  மதுவிற்கு அடிமையாகி, போதையிலேயே பொழுதைக் கழித்ததால், பணத்தை எல்லாம் இழந்தார். இறுதியில் காரையும் இழந்தார்.

கடன் வாங்கி அவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தோம். அங்கும் அவர் தொடர்ந்து மது குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவந்தோம்.

என் கணவரின் குடிப்பழக்கத்தால் நான் நிர்கதியாக நிற்பதுடன், எங்கள் எனது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது.

இந்த நிலை வேறு குடும்பத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே விழிப்புணர்வு ஊட்டும்படி இந்த பேனரை வைத்துள்ளேன்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்கிறது தமிழக அரசு. அரசாள்வோர், கவனத்துக்கு இந்த பேனர் செல்ல வேண்டும்.