விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் ஓட்டுக்கு யாரேனும் பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக, பெரிய வெற்றியைப் பெற்றுவிட துடிக்கிறது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இதுகுறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.