பழைய வாகனங்களை அழிக்க அளித்தால் புது வாகன பதிவுக் கட்டணம் இல்லை

டில்லி

புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி பழைய வாகனத்தை அழிக்க அளித்தால் புது வாகனத்துக்கு பதிவுக்கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட உள்ளது.

பழைய வாகனங்களை 15 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தும் போது சுற்றுச் சூழல் பெருமளவில் பாதிக்கப்படும் என அரசு அறிவித்து வருகிறது. ஆனால் பழைய வாகனங்களை விற்பனை செய்து விட்டு புது வாகனம் வாங்கும் போது விற்கப்பட்ட பழைய வாகனங்கள் மற்றொரு உபயோகிப்பாளருக்கு விற்கப்படுகிறது. அதனால் சாலையில் பழைய வாகனங்கள் தொடர்ந்து பயணித்து வருகின்றன.

இந்த பழைய வாகனங்கள் அழித்தொழிப்பது அதாவது ஸ்கிராப் செய்வது என்பதன் மூலம் அந்த வாகன உபயோகம் நிறுத்தப்படும். இவ்வாறு ஸ்கிராப் செய்வது என்பது நமது பேச்சு தமிழில் சொன்னால் காயலான் கடையில் போடுவது என்பதே பொருளாகும். அவ்வாறு அளிக்கப்பட்ட வண்டிகள் முழுமையாகப் பிரித்து எடுக்கப்பட்டு உருக்கப்பட்டு மீண்டும் இரும்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்.

இதை ஒட்டி புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இந்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய விதியை கொண்டு வர உத்தேசித்துள்ளது. அதன்படி இவ்வாறு வாகனங்களை அழிக்க உரிமம் பெறப்பட்ட நிறுவனத்திடம் வாகனங்களை அளிக்கும் போது அந்த நிறுவனம் ஒரு சான்றிதழை அளிக்கும். பழைய வாகனத்துக்குப் பதில் புது வாகனம் வாங்குவோர் இந்த சான்றிதழை அளித்தால் அவர்கள் செலுத்த வேண்டிய வாகனப் பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட உள்ளது.