டில்லி

ந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வழியை மூடினால் கராச்சி துறைமுகம் செல்லும் கப்பல்களை இந்தியா தடுக்கவேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாம் தேதி அன்று இந்திய அரசு விதி எண் 370ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அந்த பகுதி ஜம்மு, காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. லடாக் பகுதி மத்திய அரசின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபை வரை எடுத்துச் சென்றும் பாகிஸ்தானுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் பாகிஸ்தான் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி,”இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில் பறக்க முசுத் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது. அத்துடன்  ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் பாகிஸ்தான் சாலை வழியை இந்திய வர்த்தகத்துக்குப் பயன்படுத்துவதையும் தடை செய்வது குறித்து எங்கள் அமைச்சரவை ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடக்கிறது. மோடி ஆரம்பித்ததை நாங்கள் முடித்து வைக்கிறோம்” என அறிவித்தார்.

இதையொட்டி பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில் மத்திய அரசுக்கு ஒரு அறிவுரை அளித்துள்ளார். அவர் தனது பதிவில், “நமது வர்த்தக மற்றும் பயணிகள் விமானங்களைப் பாகிஸ்தான் வான்வழியில் செல்ல தடை விதிக்கப்பட்டால் பாகிஸ்தான் துறைமுகத்துக்கு அரேபியக்கடலில் இந்தியா வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுக்க வேண்டும் என அறிவுரை அளிக்கிறேன்” என பதிந்துள்ளார்.