டில்லி:

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்தால், இந்திய தாக்குதலும் தொடரும் என்று முப்படையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதையடுத்து, முப்படை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இரவு 7 மணிக்கு விமானப்படை துணை தளபதி ஆர்ஜிகே கபூர், கடற்படை ரியர் அட்மைரல் டிஎஸ் குஜரால், மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது

விமானப்படை துணை தளபதி ஆர். ஜி.கே. கபூர்

விமான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறிவருகிறது என்று குற்றம் சாட்டியவர்,  பிப்ரவரி 27ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்தோம். அந்த விமானங்கள், இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்தன. ஆனால், அதை இந்தியவிமானப்படை விரட்டியடித்தது. நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தானின் எப் 16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அதன் பாகங்கள் சில, கிழக்கு ரஜௌரியில் இந்திய எல்லையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. எஃப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் பொய் பேசியது. ஆனால், அதற்கான போதிய ஆதாரம் உள்ளது.

மேலும், விங் கமாண்டர் அபிநந்தன் நாளை திரும்புவது இந்திய விமானப் படைக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்

 ராணுவ மேஜர் ஜெனரல்  சுரேந்திர சிங்

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் 27-ம் தேதி அன்று குறி வைத்து தாக்கியது என்றார். ஆனால் விமானப்படைக்கு ராணுவமும் ஒத்துழைத்து பதிலடி தாக்குதல் நடத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருதாக கூறிய அவர், பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிக்கும் வரை, பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய தாக்குதல் தொடரும் என்றார்.

பயங்கரவாத கூடாரங்களை பாகிஸ்தான் தொடர தொடர, நாங்கள் பயங்கரவாத முகாம்களை அழிப்பதை தொடர்ந்து கொண்டே தான் இருப்போம் என்றார்

பாலக்கோட் தாக்குதல் குறித்து செய்தியாளர்களின்  கேள்விக்கு பதிலளித்த ஆர்ஜிகே கபூர், முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்கூட்டியே தெரிவிப்பது சரியாக இருக்காது. நாங்கள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணிணோமோ, அதை அடைந்துள்ளோம்.

நாங்கள் என்ன செய்யவேண்டும், எந்த இலக்கை அழிக்க நினைத்தோம், தற்போது என்ன செய்திருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், அந்த ஆதாரங்களை வெளியிடுவது தலைமையின் கையில் தான் உள்ளது என்றார்.

கடற்படை அதிகாரி டி.எஸ் குஜ்ரால்  

இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது என்றார். கடலுக்கு அடியில், கடல் பரப்பில், கடலுக்கு மேலான வான்பரப்பில் என முப்பரிமாணத்திலும் தாக்குதல் நடத்த முழு வல்லமையுடன் இந்திய கடற்படை உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் எந்தவித விஷமத்தனத்தில் ஈடுபட்டாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். இந்திய குடிமக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிபடுத்தவேண்டும் என்றார்.
 

இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்றும், அவர்கள் மூவரும் தெரிவித்தனர்.

இதன் பின்னர் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானத்தின் ஆவணங்களை காட்டினர்