லக்னோ:

கட்சிக் கேட்டுக்கொண்டால்  தேர்தலில் போட்டியிடுவேன் என்று காங்கிரஸ் தொண்டர்களின் கேள்விக்கு பிரியங்கா சிரித்துக்கொண்டே  பதில் அளித்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சாவுமணி அடிக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச்தின் கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக்கப்பட்டு தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறார்.

நாட்டின் பிரதமர் பதவியை தீர்மானிக்கும் சக்தி உ.பி. மாநிலத்துக்கு உண்டு.  இங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி அமைப்பதும், பிரதமர் பதவிக்கு முன்னிலைப்படுத்துவதும் வழக்கம்-

இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் வகையில், பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டு உள்ளார். அவரது  கட்டுப்பாட்டில் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன. இந்த தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து, வாக்கு சேகரித்து வரும் பிரியங்காவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், உ.பி. மாநிலத்தின்  அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்காக பிரசாரம் செய்து வரும் பிரியங்காவுக்கு அங்குள்ள மக்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்து வரும் நிலையில், அவரை தேர்தலில் போட்டியிடும்படியும் வலியுறுத்தி வருகின்றனர்.

மோடியின் தொகுதியான  வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரசாரம் செய்து வரும் பிரியங்கா, அங்கு காங்கிரஸ் கட்சி தொண்டர் களை சந்தித்து பேசினார். அப்போது, அவர்கள், பிரியங்காவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினர்.  அவர்களுக்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த  பேசிய பிரியங்கா,  இந்த பிரசாரம் மக்களவை தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டசபை தேர்தலுக்கும் சேர்த்துதான் என்று கூறியவர், கட்சி கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிப்பேன் என்றும் கூறி உள்ளார்.

பிரியங்காவின் இந்த பதில் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது.  அதே நேரத்தில், பாஜக, பிஎஸ்பி, சமாஜ்வாதி கட்சிகளுக்கு உதறலை ஏற்படுத்தி உள்ளது.