”கட்சி மேலிடம் மன்னித்தால் சச்சினை ஏற்றுக்கொள்வேன்’’ -அசோக் கெலாட்

”கட்சி மேலிடம் மன்னித்தால் சச்சினை ஏற்றுக்கொள்வேன்’’ -அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் செய்த சச்சின் பைலட், துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடுகிறது. பேரவையில் முதல்-அமைச்சர் அசோக் கெலாட், நம்பிக்கை வாக்கு கோருவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் ‘’பாதுகாப்பாக’’  இப்போது ஜெய்சால்மரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் அவர்களுடன் தங்கி இருந்த அசோக் கெலாட் நேற்று ஜெய்ப்பூர் திரும்பினார்.

வரும் வழியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்’’ கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட  சச்சின் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் காங்கிரஸ் மேலிடம்  மன்னித்தால், நானும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

’’ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க நடைபெறும் நகைச்சுவை நாடகத்தைப் பிரதமர் மோடி தடுத்த நிறுத்த வேண்டும்’’ என அவர் வலியுறுத்தினார்.

‘’ எனது பொது வாழ்க்கையில், மத்திய அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர், அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகிய பொறுப்புகளோடு, 3 முறை முதல்வராக இருந்தவன்’’ என்று குறிப்பிட்ட அசோக் கெலாட்’’ இந்த பெருமை எல்லாம் காங்கிரஸ் கட்சியையே சாரும். இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

-பா.பாரதி.