சென்னை:

பொதுமக்கள் வெளியே சுற்றுவது மேலும் அதிகரித்தால், தமிழகத்தில் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்றும், ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி இன்று கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்.

இன்று காலை  சென்னை ஆர்.ஏ.புரம் மற்றும் வேளச்சேரியில் உள்ள  சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் வசதிகள் குறித்த ஆய்வு செய்ததார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,.

தமிழகத்தில் சுமார் 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் அரசின் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு தேவையான  தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், மக்களிடையே  சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களை துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டது.

ஆனால், பலர், கொரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

குடிமக்களை ஒரு வாரத்திற்கு மளிகை பொருட்களை வாங்கி வீட்டுக்குள் இருப்பு வைக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. “சிலர் எத்தனை முறை சொல்லப்பட்டாலும் கேட்க மாட்டேங்கிறார்கள்.

144 தடை உத்தரவு, மாநிலம் முழுவதும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், பலர் தொடர்ந்து வெளியில் சுற்றித் திரிவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எச்சரித்தார்.

இந்த மாதம் இறுதி வரை இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும். மேலும் டோக்கன் வழங்கப்படும் போதே நிவாரண தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.