மாட்டுக்கறி உண்பதை நிறுத்தினால் மனிதர்கள் கொல்லப்படுவதும் நிற்கும்  : ஆர் எஸ் எஸ்

--

ராஞ்சி

மாட்டுக்கறி உண்பதை நிறுத்தி விட்டால் மனிதர்கள் அடித்துக் கொல்லபடுவதும் நின்று விடும் என ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கடந்த வாரம் பசுக்காவலர்கள் என்னும் பெயரில் சில விஷமிகள் அப்பாவிகளை அடித்துக் கொல்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   ஒரு சில தினங்களில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் இரு இஸ்லாமிய இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கியது.

பசுக்களை கடத்திச் செல்வதாக கூறி அவர்களை தாக்கியதில் ரக்பர் கான் என்னும் இளைஞர் மரணம் அடைந்தார்.  இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.   மேலும் இச்சம்பவத்தில் காவல்துறையினர் மாட்டுக்கு காட்டிய இரக்கத்தை அடிபட்ட மனிதர்களுக்கு காட்டவில்லை என புகார்கள் எழுந்தன.

நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் உரையாற்றினார்.  அவர், “எந்த மதத்திலும் பசுக்களைக் கொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை.  கோமாதா என இந்து மதத்தில் போற்றப்படுகிறது.   மாட்டுக் கொட்டகையில்  பிறந்தவர் புனித ஏசு.   மெக்கா மதினாவில் பசுவைக் கொல்ல தடை விதிக்கபட்டுள்ளது.

பசுக்காவலர்களால் மாடுகளைக் கொண்டு செல்பவர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுகிறது.   பசு மாட்டு இறைச்சியை சாப்பிடுவதை மக்கள் நிறுத்த வேண்டும்.  அவ்வாறு நிறுத்தினால் ஏன் குற்றங்கள் நடக்கும்?   மாட்டை அடித்துக் கொல்வதை நிறுத்தினால் மனிதர்கள் அடித்துக் கொல்லப்படுவதும் நின்று விடும்” என கூறி உள்ளார்.

இந்திரேஷ் குமாரின் இந்த உரை நாடெங்கும் அடுத்த சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.