ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் விலை: மத்தியஅரசிடம் மாநில அரசு கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்படும்: தம்பிதுரை
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரக்கூடாது என்றும், ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், மத்திய அரசிடம் மாநில அரசு கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதிமுக எம்.பி. தம்பித்துரை கூறி உள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத உயர்வை எட்டி உள்ளது. தன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அனைத்து பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்துள்ள மத்திய அரசு, பெட்ரோல் டீசலையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர அரசியல் கட்சிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த முழு அடைப்புக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
பெரும்பாலான மாநிலங்களில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்று உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பி துரை, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ள தினசரி விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு திரும்ப பெற்று விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறித்து ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாநில அரசுக்கு சில உரிமைகள் உள்ளன. மாநில அரசுக்கு நிதி தேவை உள்ளது. ஆகவே முழுவதையும் ஜிஎஸ்டிக்கு கொடுத்து விட்டால், மத்தியஅரசிடம் நாங்கள் கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.