டில்லி

சென்ற தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தலைவர் அஜய் அகர்வால் மோடிக்கு எதிராக கடிதம் எழுதி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஜய் அகர்வால் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டார் ரேபரேலியின் வரலாற்றில் அதிக வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி தலைவர் அஜய் அகர்வால் ஆவார். ஆயினும் அவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.

அஜய் அகர்வால் தமக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததற்கு காரணம் மோடி என குற்றம்கூறி வருகிறார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “பாஜகவுக்கு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எனது உதவியால் வென்றது. நான் மணிசங்கர ஐயர் வீட்டில் நடந்த ஒரு முக்கிய சந்திப்பு குறித்த விவரங்களை 2018 ஆம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி வெளியிட்டேன். அந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தானி அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இதை மோடி தனது தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய பாதுகாப்புக்கு காங்கிரஸ் கேடு விளைவிப்பதாக பல தேர்தல் கூட்டங்களில் குறிப்பிட்டார். பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு இந்த தகவல் மிகவும் பயன்பட்டது. இந்த தகவல் இல்லை எனில் இம்முறை குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்தித்திருக்கும். இந்த வெற்றிக்காக எனக்கு ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எனக்கு பிரதமர் மோடியை 28 வருடங்களாக தெரியும். நாங்கள் இருவரும் பாஜக அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான முறை ஒன்றாக உணவு சாப்பிட்டுள்ளோம். ஆயினும் அவர் என்னை இரண்டாம் தரமாகவே நடத்தி உள்ளார். கடந்த 2014 ஆம் வருட தேர்தலில் நான் இந்திரா காந்தியின் குடும்ப கோட்டைக்குள் புகுந்து 1,73,721 வாக்குகள் பெற்றேன். அதற்கு முந்தைய தேர்தல்களில் பாஜக மிக மிக குறைந்த வாக்குகளே பெற்றிருந்தது.

தற்போது மிக திறமையான ஒரு வேட்பாளரை ரே பரேலி தொகுதியில் நிறுத்தினாலும் அவரால் 50,000 வாக்குகள் கூட பெற முடியாது. அவ்வளவு ஏன் நியாயமான முறையில் தற்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்காது. இதற்கு பிரதமர் மோடியே காரணம் அவார்.   பணமதிப்பிழப்பு சமயத்தில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் திரும்ப வராது என மோடி கூறினார். ஆனால் அனைத்து பணமும் வந்து விட்டது. இது எந்த வங்கியில் யாரால் மாற்றப்பட்டது என்பதற்கு எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை” என தெரிவித்துள்ளார்.