தொடரும் போராட்டங்களால் சபரிமலையில் உயிரிழப்புகள் ஏற்படலாம் : காவல் ஆணையர்

திருவனந்தபுரம்

ரும் சீசனில் சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என கேரள மாநில சிறப்பு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வெகு நாட்களாக இருந்த வழக்கத்தை மாற்றி அனத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கிய இந்த தீர்ப்பை அமுல் படுத்த கேரள கம்யூனிஸ்ட் அரசு முயன்றது. கேரளாவில் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் இதை எதிர்த்து வருகின்றன.

கடந்த வாரம் சபரிமலை கோவில் ஐப்பசி மாத நடை திறப்பின் போது இளம் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பை மீறி வந்த பல பெண்களை காவல்துறையினர் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இது குறித்து கேரள மாநில சிறப்பு காவல் ஆணையர் மனோஜ் உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அந்த அறிக்கையில், “அடுத்த மாதம் தொடங்க உள்ள சீசனின் போது இப்போது நடந்ததைப் போல் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு. அது தவிர போராட்டங்களில் ஈடுபட அதிக அளவில் குவியும் பக்தர்களால் நெரிசல் ஏற்படும். அதனாலும் உயிரழப்புக்கள் அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.