ரஜினி வந்தால் அரசியல் சுத்தமாகும்…….ராகவா லாரன்ஸ்

மதுரை:

ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையை பிடிப்பது உறுதி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மதுரை அழகர்கோவில் அருகே முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை நடிகர் ராகவா லாரனஸ் வழங்கி பேசுகையில், ‘‘ இவ்வளவு நாள், நாம் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி வந்தோம். அந்த அசுத்தத்தை ஆன்மீக அரசியல் மூலம் சுத்தம் செய்யவே ரஜினி அரசியலுக்கு வந்திருக்கிறார்.

ஆன்மீகத்துக்கும், மதவாதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. மனசாட்சிப்படி உன் மனதில் ஆண்டவன் இருக்கிறான் என்றால் அது ஆன்மீகம். அதுவே, உன் மனதில் ஜீசஸ் தான் இருக்கிறார், அல்லா தான் இருக்கிறார், சிவன் தான் இருக்கிறார் என்றால் அதுதான் மதவாதம் என்றார்.

மேலும், அவர் கூறுகையில், கட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவற்றையெல்லாம் ரஜினி அறிவித்த பிறகு தான் உண்மையில் தலை சுத்தப் போகிறது. ரஜினி வந்ததும் அரசியல் எளிமையாக இருக்கும். அரசியல் சுத்தமாகும்.

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் ரஜினி. அவர் மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது. ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால் அவர் கோட்டையை பிடிப்பது உறுதி’’ என்றார்.