ராம் ஜென்ம பூமி வழக்கு ஒத்தி வைப்பால் மீண்டும் 1992 கலவரம் நிகழும் : ஆர் எஸ் எஸ்

மும்பை

ராம் ஜென்ம பூமி வழக்கு ஒத்தி வைக்கப்படுவதால் மீண்டும் 1992ல் நடந்தது போல் கலவரம் நிகழும் என ஆர் எஸ் எஸ் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராமர் பிறந்த இடத்தில் கட்டியதாக கூறப்பட்ட பாபர் மசூதி குறித்து வெகு நாட்களாக சர்ச்சை உள்ளது. கடந்த 1992 ஆம் வருடம் அங்கு கரசேவை செய்ய சென்ற ஆர் எஸ் எஸ் தலைமையிலான இந்து அமைப்பினர் திடீரென அந்த மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர். அதனால் நாடெங்கும் கடும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் மாண்டனர்.

தற்போது அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட அனுமதி கோரி இந்துக்களும், மசூதியை கட்ட இஸ்லாமியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இரு தரப்பினராலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பல வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

இதற்கு நாடெங்கும் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மும்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி, “கடந்த 7 வருடங்களாக உச்சநீதிமன்றம் ராம் ஜென்ம பூமி வழக்கை விசாரணை செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து தெரியவில்லை என்பதால் தற்போது மீண்டும் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இந்த ஒத்திவைப்பு எங்கள் மனதில் வலியை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆர் எஸ் எஸ் பொறுமையை கடைபிடித்து  வருகிறது. ஆனால் எங்களால் மேலும் மேலும் காத்திருக்க முடியாது. ராமர் என்பவர் அனைவரும் மனதிலும் உள்ளவர். ஆனால் அவரை வழிபட கோவில்கள் அவசியம் வேண்டும். எனவே மத்திய அரசு தலையிட்டு அங்கு கோவில் அமைக்க சட்டம் இயற்ற வேண்டும். இந்த வழக்கை உச்சநீதிமன்ற்ம் மேலும் ஒத்தி வைத்தால் கடந்த 1992 ஆம் வருடம் நடந்ததைப் போல கலவரங்கள் மீண்டும் நடைபெற நேரிடலாம்” என தெரிவித்துள்ளார்.

You may have missed