அமைதியை பாதுகாக்க ராம் ஜென்ம பூமி வழக்கில் விரைவில் தீர்ப்பு தேவை : யோகி

க்னோ

ராம் ஜென்ம பூமி வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அமைதியை காக்க முடியும் என யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

அயோத்தியில் ராம் ஜென்ம பூமி குறித்து வழக்கு கடந்த 8 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைத்தது. இது இந்து மத அமைப்புக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்து மத தலைவர்களில் ஒருவரான பிரவீன் தொகாடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி அமைந்துள்ள உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், “உச்சநீதிமன்றம் ராம் ஜென்ம பூமி வழக்கில் மிகவும் தாமதம் செய்து வருகிறது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பதே உண்மை. நான் அரசியல் சாசன பதவி வகிப்பதால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாம்ல் இருக்கிறேன்.
உரிய நேரத்தில் தீர்ப்பு கிடைக்காமல் தாமதம் அடைவதால் மக்கள் சீற்றம் அடைவது இயல்பான ஒன்றாகும். இந்த வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கினால் அட்டுமே அமைதியையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க முடியும். அவ்வாறு விரைவான தீர்ப்பு அளிக்க வழக்கை தாமதம் செய்யாமல் நடத்த வேண்டும்.
இந்த ராம் ஜென்ம பூமி விவகாரத்தில் அரசியல் வழியான தீர்ப்பை விட நீதிமன்ற தீர்ப்பே சிறந்தது ஆகும். நீதிமன்றம் பெரும்பான்மை மக்கள் இடையில் அமைதியையும் அவர்கள் நம்பிக்கையையும் மக்கள் இடையே சகோதரத்துவத்தை பாதுகாக்கும் வகையிலும் விரைவில் தீர்ப்பு வழங்கும் என நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.