ஜம்மு-காஷ்மீர் நாட்டை விட்டு வெளியேறும்: பிரதமர் மோடிக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 -ஐ நீக்கினால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவை விட்டு வெளியேறும் என்று முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி எச்சரித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டப்பிரிவு விதி எண் 35ஏ மூலம் 1954 ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அந்த சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு அந்தஸ்தான “35A விதிமுறைகளை சுட்டிக்காட்டி, அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ‘வி தி சிட்டிசன்ஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது அடுத்தக்கட்ட விசாரணை 2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில பி.டி.பி. கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 இன் கீழ் வழங்கப்படும் அதிகாரம் நீக்கப்பட்டால் மத்திய அரசு பல விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று மிரட்டி உள்ளார்.
நாட்டின் நலனை பாதுகாப்பதில் மோடி அவர்கள் வாஜ்பாய் போல மாற வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் போல இருநாடுகளுக்கு இடையே சமாதான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்
தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் மாநில நலனுக்காக பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நட்பை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.