சென்னை: குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி கூறி இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக, சிபிசிஐடி போலீசார் களத்தில் இறங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பலரும் தீவிர விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.  இந் நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப் 4தேர்வு முறைகேடு வெளிவந்த அடுத்த நாளே குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதே  ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து முதல் தரவரிசையில் 30 பேர் முறைகேடு செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குரூப் 2 தேர்வு முறைகேடு உறுதியான பிறகு அதற்கு பிறகு குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் விசாரணையில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. முறைகேடு உறுதியானால் குரூப் 4 தேர்வில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கையை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.