சசிகலா குடும்பம் கட்சியைவிட்டு வெளியேறினால் மட்டுமே இணைப்பு! ஓபிஎஸ் தடாலடி பேட்டி

சென்னை,

சிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேறினால் மட்டுமே தங்களது அணி அதிமுக அம்மா அணியுடன் இணையும் என்று ஓபிஎஸ் அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இன்று பிற்பகல் சுமார் 1 மணி அளவில் தனது சொந்த தொகுதியான பெரியகுளம் வந்துள்ள ஓபிஎஸ் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், இரு அணிகளும் இணைய 9 பேர் கொண்ட குழுவை சசிகலா அணியினர்  அமைத்துள்ளது குறித்தும் செய்தி யாளர்களிடம் கேள்வி விடுத்தனர்.

அப்போது ஓபிஎஸ் கூறியதாவது,

எந்த ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் அதிமுக சென்று விடக்கூடாது என்று நாங்கள் பிரிந்து வந்தோமோ அந்த அடிப்படை கொள்கையில் எந்தவித மாற்றமுமில்லை என்று கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சசிகலா மன்னிப்பு கேட்டதால் மீண்டும் வீட்டில் சேர்த்தார். ஆனால் அவரை கட்சியில் சேர்க்கவில்லை என்ற ஓபிஎஸ்,   குடும்ப ஆட்சியை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் விரும்பவில்லை என்றும் கூறினார்.

கடந்த 1972ம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. சுமார் 16 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்த கட்சி, எம்ஜிஆரின் மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் புத்துயிர் பெற்றது.

மக்கள் ஆட்சியாகவும், தொண்டர்கள் இயக்கமாவும் ஜெயலலிதா வழி நடத்தி வந்தார். எம்ஜிஆர் எப்படி எந்த ஒரு குடும்பத்தினரிடமும் சேரக் கூடாது என நினைத்தாரோ அதேபோல், ஜெயலலிதாவும் நினைத்தார். அதையே அவரும் கடைபிடித்தார். உறுதியாக இருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு சசிகலாவையும், அவரது உறவினர்களையும் கட்சியில் இருந்தும், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும் வெளியேற்றினார்.

பின்னர் 4 மாதத்துக்கு பின், சசிகலா எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தார். அதில், நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டோன். என் குடும்பத்தினர் உங்களுக்கு செய்த சதி, எனக்கு இப்போதுதான் தெரிந்தது என கூறினார்.

இதனால், அவரை மட்டும் உதவியாளராக வீட்டுக்குள் சேர்த்தார்.

அவரது குடும்பத்தினர் 16 பேரை, ஜெயலலிதா இறக்கும் வரை கட்சியில் உறுப்பினராகவும் சேர்க்கவில்லை. வீட்டிலும் சேர்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிலைப்பாடு இதுதான்.

எங்களது நிலைப்பாடு முழுவதும் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை முறை மட்டுமே. அதை வெளி கொண்டு வரவேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

எங்களுடைய இந்த அடிப்படை கொள்கைக்கு ஒத்து வந்தால், ஒத்துவர முடியும். இல்லையென்றால் பேச்சுவார்த்தை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அதிமுக ஒபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.