டில்லி

கொரோனா விதிகளின் படி வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அணிவது அவசியம் என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.   அதன்படி முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு அபராதம் கடுமையாக்கப்பட்டுள்ளது. டில்லியில் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.   இதை எதிர்த்து ஒரு சில வழக்கறிஞர்கள் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் வாகனத்தில் தாங்கள் மட்டுமே அமர்ந்து ஓட்டிச் சென்றதாகவும் இதனால் அது பொது இடம் அல்ல எனவும் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.   ஒருவர் தனக்குச் சொந்தமான இடத்தில் தான் மட்டுமே இருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் இதற்காக தங்களிடம் அபராதம் வசூலித்தது தவறு எனவும் மனுவில் கூறி தங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரினர்.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “வாகனத்தில் செல்பவர் ஒரு அலுவலகம், சந்தை, மருத்துவமனை அல்லது பலர் உள்ள தெருக்கள் போன்ற இடங்களுக்குச் செல்லக் கூடும்.  அப்போது அவர் காற்றுக்காக வண்டியின் ஜன்னல்களைத் திறந்து கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.  அல்லது  வண்டியில் செல்லும் போது சிக்னலில் நிறுத்தவோ அல்லது ஏதேனும் பொருட்களை வண்டியில் இருந்தபடியே வாங்கவோ நேரிடலாம்.

இதனால் வாகன ஓட்டி  பலருடன் தொடர்பில் வருகிறார்.   இதன் மூலம் அவருக்கோ அல்லது அவரிடமிருந்து மற்றவர்களுக்கோ தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.   அவர் முகக் கவசம் அணியாததால் வாகனத்தில் ஏறும் சில நிமிடங்களுக்கு முன்பு கூட தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் பிறகு அதைப் பரப்பத் தொடங்கலாம்.   இவ்வளவு வாய்ப்புக்கள் இருக்கும் போது அவர் தனது வண்டியை பொது இடம் எனவே கருத வேண்டும்.  எனவே அவர் முகக் கவசம் அணிவது கட்டாயமாகிறது.” என தெரிவித்துள்ளது.