உயிரை விட வருபவர்கள் எப்படி உயிருடன் இருப்பார்கள்? சிஏஏ எதிர்ப்பு போராட்டம் பற்றி ஆதித்யநாத் கருத்து

லக்னோ: உயிரைவிட வேண்டும் என்பதற்காகவே சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு வருகிறவர்கள் எப்படி உயிருடன் இருப்பார்கள் என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டங்கள் ஓயவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

யாரும் சுட்டுக்கொல்லப்படவில்லை என்று முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான அரசு கூறி வருகிறது. ஆனால் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நீதி விசாரணை வேண்டும் என்று கோரி வருகின்றன.

இந் நிலையில் சட்டசபையில் அவர் கூறியதாவது:  சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டுகிறேன். சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் வரும் போது, அவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்?

அப்பாவி பொதுமக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவர் வரும் போது, ஒன்று அவரோ அல்லது அவரை தடுக்கும் போலீசாரோ சாகத்தான் வேண்டும்.

கொல்லப்பட்டவர்கள் யாரும் துப்பாக்கிக் குண்டுகளால் பலியாகவில்லை. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் பெரிய சதி இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.