கொழும்பு:

இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சவாலும் ஆபத்தும் நிறைந்தது என இலங்கை முன்னாள் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் வேகமாகப் பரவிவரும் கொரோனாத் தொற்றால் பெரும்பான்மை நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் போட்டிகளும் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு காலவரையறை இன்றி பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது.

இச்சூழலில் இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷமிசில்லா கூறினார்.

மேலும் இந்தியாவிற்கு முன்பாகவே இலங்கை கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டுவிடும். எனவே பிசிசிஐ விரும்பினால் போட்டிகளை இலங்கையில் நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இலங்கையின் முன்னாள் அதிரடி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

” இது நிரந்தர தீர்வாக அமையாது. இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சவாலும் ஆபத்தும் நிறைந்தது. உலகம் முழுதும் கொரோனா  பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே அனைத்து நாடுகளும் அந்நோயிலிருந்து மீளவேண்டும்.

ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உலகம் முழுதும் இருந்து வீரர்கள் வருவர். இதில் சமூக விலகலும்,  தனிமைப்படுதலும் சாத்தியம் இல்லை. எனவே அந்நிலை வீரர்களுக்கும், நாட்டிற்கும் ஆபத்தாகவே முடியும்” எனக் கூறினார்.