” தாஜ்மஹால் அழிந்து போனால் மீண்டும் பாதுகாக்க முடியாது “ – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அழிந்து போனால், அதனை மீண்டும் பாதுகாக்க முடியாது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பல்வேறு அமைப்புகளிடம் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

tajmahal

உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் திகழ்கிறது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹாலை காண வெளிநாடுகளில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்தியாவிற்கு சுற்றுலாத்துறையின் சார்பாக அதிகளவில் வருமானம் வருகிறது.

சமீப காலமாக தாஜ்மஹாலின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசு காணமாக தாஜ்மஹால் அதிக பாதிப்படைந்து வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான அதனை பாதுகாக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாஜ்மஹால் அழிந்து போனால் அதை மீண்டும் பாதுகாக்க முடியாது எனவும், அதிகாரிகளுக்கு அது கடினமாக இருக்கும் என்று எச்சரித்தனர். மேலும், தாஜ்மஹால் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் குறித்து அறிக்கை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாஜ்மஹாலை பாதுகாக்க டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக் கலைக்கல்லூரி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்து வருகிறது. இந்த ஆவணத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும், அதனை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நட்கர்னி கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தாஜ்மஹாலை பாதுகாக்க பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசனை பெறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஆக்ராவை கலாச்சார நகரமாக அறிவிப்பது தொடர்பான திட்டத்தை தயாரிக்க உத்திரப்பிரதேச அரசிடம் கோரியிருப்பதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். இந்த வழக்கு செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.