பெங்களூர்:

மாநிலஅரசின் முடிவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய பாஜக அரசே பொறுப்பு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மிரட்டல் விடுத்துள்ளார்.

காவிரி நதி விவகாரத்தில், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்டிருந்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு எந்தவித முடிவையும் அறிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.

இதன் காரணமாக, தமிழக விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் மாநில அரசின் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என்று கூறினார்.

மேலும், “மாநில அரசின் முடிவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கான விளைவுகளை  மத்திய பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜகவும், காங்கிரசும் முயற்சித்து வருவதால், காவிரி பிரச்சினையில் மத்திய பாஜக அரசு மவுனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.