டில்லி:

சிக்கிம் எல்லையில் உள்ள படைகளை வாபஸ் பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா – சீனா எல்லையில், பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் ,  ‘சீன ராணுவம் குறித்து வீண் கற்பனையில், குறைத்து மதிப்பிட வேண்டாம்; எல்லையை காக்க, எதற்கும் தயாராக உள்ளோம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த  ஒரு மாதத்துக்கும் மேலாக இந்திய சீன  எல்லையில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சீன ராணுவ செய்தி தொடர்பாளர், வூ குயான், நேற்று கூறியதாவது: எல்லையில் நாங்கள் அமைதி காப்பதால், இந்தியா வீண் கற்பனையில் இருக்க வேண்டாம்.

எல்லையை காக்க, சீன ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த பிரச்னை குறித்து பேச்சு நடத்துவதற்கு முன், எல்லையில் இருந்து, இந்தியா, தன் படைகளை வாபஸ் பெற வேண்டும். மலையைக் கூட அசைத்து விடலாம்; எங்கள் ராணுவத்தை யாராலும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.