சென்னை, 

வாரிசு சான்றிதழில், வாரிசுதாரர் பெயர் இல்லையென்றாலும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சேலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் 2008ம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மரண மடைந்தார். அதைத்தொடர்ந்து அவரின் பெற்றோர் ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு சேலம் மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு லட்சரூபாய் இழப்பீடு வழங்க ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால், சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி விமலா அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவர் எழுதியுள்ள தீர்ப்பில்,  குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் லாம்ப் கூறியுள்ளார் .

இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் வாரிசு சான்றிதழில் இறந்த தாமோதரனின் தந்தை பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் சேலம் வாகன விபத்து தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி இறந்தவரின் தாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையைக் கோர வேண்டும் என்று தெரிகிறது.

காப்பீட்டு நிறுவனத்தை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய தொகை அற்பமானது.

இறந்தவரின் தாய் மட்டும் தான் அந்த இழப்பீட்டுத் தொகையை பெற வேண்டும் என்பதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்படவில்லை. இழப்பீடு தொகை குறித்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்களுக்கு தவறான முன் உதாரணத்தை வழங்க இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கக் கூடாது.

சரியான சட்ட நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பது தான் நீதி மன்றத்தின் வேலை.  இதன்படி இறந்த தாமோதரனின் தந்தைக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது என்று காப்பீட்டு நிறுனம் கூறுவது மகனின் இழப்பை விட மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.

தனது மகனின் இறப்பால் தந்தை எல்லாவித சந்தோஷத்தையும் இழக்கிறார். அதனால் இந்த வழக்கில் தாயுடன் சேர்த்து தந்தைக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

இழப்பீட்டு தொகையை 7. 5 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.