சென்னை:

2டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால், அந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும், என்று சிவில்சப்ளை சிஐடி பிரிவு எஸ்.பி.சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடமாநிலங்களில் பெய்த மழை காரணமாக, வெங்காயப் பயிர்கள் அழுகி நாசமானதால், நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வெங்காயம்  விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், சில வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

வெங்காயத்தை பதுக்கல்காரர்களின் குடோனில் பதுக்கி இருப்பு வைக்கப்பட்டதால், அதன்விலை  பல மடங்கு  உயர்ந்தது. மக்களிடையே செயற்கையான வெங்காய தட்டுப்பாட்டை உருவாக்கி வெங்காய விலையை உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சிவில்சப்ளை  சிஐடி பிரிவு எஸ்.பி. சாந்தி, வியாபாரிகள்  2 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் வெங்காய மண்டிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்தில் இருந்து இந்தியாவிற்கு கப்பல் மூலமாக பலஆயிரம் டன்கள்  வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும்,  ஒரே நாளில் வெங்காயத்தின் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய அளவிலான இந்த வெங்காயம் கிலோ ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மட்டுமே உள்ளது. தற்போது இந்த வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதை ஓட்டல்கள்  மட்டுமே வாங்கிச்செல்ல ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.