பிரச்சினை வந்தா பொறுப்பேற்பீர்களா?: மத்திய அமைச்சரிடம் அதிரடியாக கேட்ட எஸ்.பி.

பிரச்சினை வந்தால் நீங்கள்  பொறுபேற்றுக்கொள்வீர்களா என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மாவட்ட எஸ்.பி. அதிரடியாக கேள்வி எழுப்பிய சம்பவம் சபரிமலையில் நடந்திருக்கிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந்து மத அமைப்பினர் சிலர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த முறை சபரிமலை நடை திறக்கப்பட்டபோது, சில பெண்கள்  அய்யப்பனை தரிசிக்க சென்றனர். இவர்களை எதிர்த்து இந்து மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். கும்பலை கலைக்க காவல்துறை தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது ண்டல பூஜைக்காக சபரிமலை நடை  திறக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே பிரச்சினை ஏற்பட்டதால், தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு  சபரிமலையில் கேரள காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தனது ஆதரவாளர்களுடன் கார்களில் சபரிமலை செல்வதற்காக  சபரிமலைக்குச் சென்றார். நிலக்கல் என்ற பகுதிக்குச் சென்ற அவர், அங்கிருந்து  பம்பை செல்ல முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறையினர், பம்பைக்கு அமைச்சர் வண்டியை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும்,  அவருடன் வருபவர்கள் கேரள அரசின் பேருந்தில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதனால் பொன்.ராதாகிருஷ்ணனும் மற்றும் அவருடன் வந்தவர்களும் காவல்துறையினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

(இது குறித்து தனியே செய்தி வெளியிட்டுள்ளோம்.)

இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, கேரள அரசு தேவையற்ற சிரமங்களை பக்தர்களுக்கு ஏற்படுத்துகிறது. அரசு வாகனங்களை மட்டுமே பம்பைக்கு அனுமதிப்போம் என காவல்துறையினர்  கடுமையாக நடந்துகொள்ள கூடாது என்றார்.

ஆனால் அவரது ஆதரவாளர்கள் தனியார் வாகனங்களில் பம்பை செல்ல காவல்துறையினர் கண்டிப்பாக மறுத்துவிட்டனர். இதையடுத்து தானும் அரசு பேருந்தில் பயணித்து பம்பை சென்றார்  பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னதாக காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர், “அரசு வாகனங்களை மட்டுமே அனுமதிப்போம் எனக் கூறிக்கொண்டு தனியார் வாகனங்கனை ஏன் பம்பைக்கு அனுப்புகிறீர்கள்” என எஸ்.பி-யிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்பி, “தனியார் வாகனங்கள் பம்பையில் பார்க்கிங் செய்யப்படாது. பக்தர்களை இறக்கிவிட்டு வந்துவிடும்” என்றார். மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குவாதம் செய்யவே, “ஒருவேளை பம்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வீர்களா” என்று கேட்கவே, அதன் பிறகு எதுவும் பேசாமல் பொன்.ராதாகிருஷ்ணனும் அரசு வாகனத்திலேயே பம்பை சென்றார்.

#ponradhakrishnan #minister # sabarimala #sp