சென்னை:

ணல் குவாரிகளை மூடாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு அடுத்தடுத்து மணல் குவாரிகளை மட்டும் திறந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள ஆழங்காத்தான் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கும் மணல் குவாரியில் விதிகளை மீறி 40 அடி ஆழம் வரை மணல் வெட்டி எடுக்கப்படுகிறது. சில இடங்களில் 50 அடி, 60 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டி ருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் புளியங்குடி, அரசூர், நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களிலும் 50 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் வெள்ளாற்றிலும் குவாரி அமைத்து மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. பாப்பாக்குடி குவாரியில் 50 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது.

இனியும் விவசாயமும், இயற்கை வளங்களும் அழியாமல் தடுக்கப்பட வேண்டும் என்றால், கொள்ளிடம், வெள்ளாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதை செய்ய தமிழக அரசு தவறினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.