சன்னி லியோன் நடிக்கும் படத்தின் தலைப்பை மாற்றாவிட்டால் போராட்டம்!:  இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

சன்னி லியோன்

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் “வீரமாதேவி” என்ற தமிழ்ப்படத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன்,  ஆங்கிலத்தில் நீலப்படங்கள் பலவற்றில் நடித்தவர். பிறகு இந்தித் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது, “வீரமாதேவி” என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சாமிடா’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கன்னியும் காளையும் செம காதல்’ ஆகிய படங்களை இயக்கி  வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார்.  சிரித்திர பின்னணி கொண்ட கதை என்று அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்துக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாவது:

“சன்னி லியோன் என்பவர் ஆபாச நடிகை. நீல்ப்படங்களில் நடித்தவர். அவர் நடிக்கும் படத்துக்கு, வீரமாதேவி என பெயரிடப்பட்டது மிகப் பெரும் தவறு. கண்டனத்துக்குரியது.

வீரமாதேவி அறிவிப்பு

வீரமாதேவி என்பது தமிழர்களின் குலதெய்வங்கள்.. சிறு தெய்வங்களில் ஒன்று.  அது மட்டுமல்ல.. வரலாற்றிலும் இடம் பெற்றிருக்கும் பெயர் வீரமாதேவி.

ஆதித்த சோழனது திருமகனான முதற்பராந்தக சோழனின் மகள்களில் ஒருவரது பெயர் வீரமாதேவி.

அது மட்டுமல்ல.. தமிழ் மன்னர்கள் வரலாற்றிலேயே தலை  சிறந்தவன் இராசேந்திர சோழன்.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய  இராஜராஜ சோழனின் மகன்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது என்பது வரலாறு.  சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும்  கிடையாது.

ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை  தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் மேலும் விரிவுபடுத்தினான். இவரது காலத்தில்  சோழநாடு.. இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக விளங்கியது.

வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.

அர்ஜூன் சம்பத்

அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது

இத்தனை சிறப்பு மிக்க ராஜேந்திரனது தேவியருள் ஒருவர் வீரமாதேவி.

ராஜேந்திரன் வீரசொர்க்கம் அடைந்தபோது, உடன்கட்டை ஏறி  உயிர் துறந்தவர் வீரமாதேவி.

இப்படிப்பட்டவரின் பெயரை ஆபாச நடிகை நடிக்கும் படத்துக்கு வைப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.

உடனடியாக படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம்” என்று அதிரடியாக நம்மிடம் தெரிவித்தார் அர்ஜூன் சம்பத்.

Leave a Reply

Your email address will not be published.