“பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும்?” :  பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

வ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா, “நான் பொருளாளராக இருந்தாலும் உங்களுக்கு என்றைக்கும் அண்ணியாக இருப்பேன். தேமுதிகவை குடும்பக்கட்சி என்று சொல்லி விடுவார்கள் என யாரும் அஞ்சத் தேவையில்லை. அப்படிப்பட்ட விமர்சனத்துக்கு நீங்கள் பதில் அளிக்கவும் வேண்டாம்.

அதிமுக, திமுகவிற்கு மாற்றுக்கட்சியாக தேமுதிக உள்ளது.

இது விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி. மற்றவர்கள் ஆரம்பித்த கட்சியில், ஒரு குடும்பம் கட்சியாக மாற்ற வில்லை. நூறாண்டுகால காங்கிரஸ் கட்சிக்கே எட்டு சதவீத ஒட்டு வங்கி தான் இருக்கிறது.

பிற கட்சியை போல லஞ்ச ஊழலில் நாம் கட்சியை வளர்க்கவில்லை. எதையும் எதிர்கொள்ளும் துணிவு எனக்கு இருக்கிறது.

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிங்கம் போல விஜயகாந்த் வருவார். இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் மீண்டும் அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம்.  அவருக்கு எந்த குறையும் இல்லை. இனி வரும் காலத்தில் அவரது தலைமையில் ஆட்சி வரும். பழைய கம்பீரத்துடன் அவர் வந்து பேசுவார்.

நாடாளுமன்ற தேர்தலுடன்  சட்டப்பேரவை தேர்தலும் வர இருக்கிறது. அதற்கு நாம் தயாராவோம்!” என்று பேசிய பிரேமலதா, “ஒவ்வொரு பெண்ணும் நெருப்பு மாதிரி இருந்தால் மீ டூ எப்படி வரும். நாமே நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “தமிழக பெண்கள் தைரியமாக செயல்பட்டு வருகின்றனர். மீ டு வை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் சர்ச்சையாக மாற்றக் கூடாது. ;பெண்கள் தைரியமாக இருந்தால் எதுவும் நடக்காது” என்று பேசி முடித்தார்.