பெண்கள் வந்தால் நடையை மூடி விடுவோம்: அய்யப்பன் கோவில் மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை

பம்பா:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம்பெண்கள் நுழைந்தால், கோவில்  நடையை மூடிவிடுவோம் என்று  அய்யப்பன் கோவில் மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதிகத்தை தீர்ப்பு மீறி உள்ளதாக கூறி கேரளா முழுவதும் மக்கள். அய்யப்ப பக்தர்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை சபரிமலை கோவில் நடை பூஜைக்காக திறப்பட உள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே  ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை  அய்யப்பன் கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

அப்போது,   சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர். மீறி காவல்துறை உதவியுடன்  பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம். கோவில் நடையை சாத்தி சுத்தி கலச பூஜை நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பெண்கள் திருப்பி அனுப்பட்டனர்.

இந்த நிலையில்,  தீபாவளி மற்றும் ஸ்ரீசித்ர அட்ட திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.  நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

தற்போதும், இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு கோவிலுக்குள்  அனுமதிக்க கூடாது என்று  பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியும் பெண் பக்தர்களை சன்னிதானத்தில் அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

“சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்றும்,  கோவிலை பூட்டி சாவியை ராஜ குடும்பத்திடம் ஒப்படைப்போம் என்று மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் சபரிமலை கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   கோவிலுக்கு வரும் பெண்களுக்கு கமாண்டா படை  பாதுகாப்பு அளிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. சபரி மலை பகுதியில் கமாண்டா படை காவல்துறையினர் உள்பட சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில்,  50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள்  சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பணி அமர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.