டில்லி

பிரதமர் தெரிவித்தபடி சீன ஊடுருவல் இல்லை எனில் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் எப்படி உயிர் இழந்தனர் எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த வாரம் சீனப் படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.  மேலும் 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.  இதையொட்டி நாடெங்கும் சீனா மீது எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது.

தாக்குதலில் உயிர் இழந்த இந்திய வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்திய வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் காங்கிரஸ் கட்சி ‘ஸ்பீக் அப் ஃபார் அவர் ஜவான்ஸ்” என்னும் பிரசாரத்தைச் செய்து வருகிறது.    இதில்  ஒரு பகுதியாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சோனியா காந்தி, “சீனப்படைகள் லடாக்கில் உள்ள இந்தியப் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன.  அந்த நிலப்பகுதியை மோடி அரசு எவ்வாறு மீட்கப் போகிறது?  பிரதமர் மோடி சீன ஊடுருவல் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதன்படி சீன ஊடுருவல் இல்லை என வைத்துக் கொண்டால் கலவான பள்ளத்தாக்கில் எப்படி 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர்?

பிரதமர் மோடி சீன ஊடுருவல் இல்லை எனத் தெரிவித்து வருகிறார்.   ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் சீன ஊடுருவல் பற்றி பேசி வருகின்றனர்.  இந்திய ராணுவ தளபதிகளும் பாதுகாப்பு நிபுணர்களும் சீன ஊடுருவல் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

சீன ஆக்கிரமிப்பை தடுக்க நடந்த முயற்சியில் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.  நாடு அவர்களுக்கு எப்போதும் கடன் பட்டுள்ளது.   தங்கள் உயிரை அபாயத்தில் வைத்து நாட்டை பாதுகாத்து வரும் வீரர்கள் தான் நாம் பாதுகாப்பாக இருக்கக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.