பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், மீண்டும் தாய் கழகத்துக்கே  திரும்பி வந்தால், அவர்களுக்கு  உரிய மரியாதை வழங்கப்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற சர்கஸ் கூடாரம் விரைவில் காலியாகிவிடும் என்றார்.

அதிமுகவில் இருந்து  பிரிந்து சென்றவர்களில் டி.டி.வி தினகரனை தவிர யார் வந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். டி.டி.வி தினகரன் ஒரு மண் குதிரை, அவரை யார் நம்பி சென்றாலும் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும்,  வீக்காக உள்ளவர்கள் தான் கூட்டணிக்காக கூட்டத்தை சேர்பார்கள். நாங்கள் பலமாக உள்ளோம். தேர்தல் வரும் நேரத்தில் யார் எங்களிடம் வருகிறார்களோ அவர்களை சேர்ப்பது குறித்து கட்சி முடிவெடுக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரே அலை, அது அம்மா_அலை தான். அது தான் தமிழ்நாட்டின் நிலை என்றவர்,  அதிமுகவுடன் அமமுக இணைப்பு என்ற செய்தி, ஒரு வதந்தி. அது தவறானது என்றார்.

அதிமுக என்பது மிகப்பெரிய சமுத்திரம் போன்ற இயக்கம்.அமமுக நேற்று முளைத்த காளான். செந்தில் பாலாஜி திமுகவுக்கு செல்லவுள்ளார். யாருக்கு தெரியும் நாளை டிடிவி டதினகரன்கூட திமுக போனாலும் போலாம் என்றவர், மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம் என ஏற்கனவே எச்சரித்தோம். தினகரனை நம்பி சென்றால் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும்.

தமிழக முதல்வர் விடுத்த அழைப்பை ஏற்று பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க அதிமுக தயாராக உள்ளது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் 5 மாநில தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், 5 மாநில தேர்தல் முடிவு மக்களுடைய தீர்ப்பை காட்டுகிறது. இன்றைக்கு உள்ள நிலைமை நாளை மாறும். இதை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது என்றவர்,  அனுபவ ரீதியாக சொல்கிறேன், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கார்ட்டூன் கேலரி